நாகர்கோவில், அக்.16: குமரி மாவட்டத்தில் 15 மையங்களில் நடைபெற்ற தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வில் 7389 பேர் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவிகள் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. அந்தவகையில், 2023-24-ம் ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நேற்று நடத்தப்பட்டது.
இத்தேர்வில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஒட்டுமொத்தமாக 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்விதுறை மூலம் மாதம் அவர்களுக்கு தலா ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். பிளஸ்-1 மாணவர்கள் இணையதளத்தில் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து இந்த தேர்வில் பங்கேற்றனர். தேர்வுகள் நேற்று காலையில் தொடங்கிய நிலையில் தமிழ்மொழி பாட ஆசிரியர்கள் தேர்வறை கண்காணிப்பாளராக நியமிக்கப்படவில்லை.
ஒவ்வொரு தேர்வு அறையிலும் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வுக்கான வினாத்தாள் தேர்வு துவங்குவதற்கு 15 நிமிடங்கள் முன்னதாக அதாவது காலை 9.45 மணிக்கு பிரிக்கப்பட்டு காலை 10 மணிக்கு தேர்வர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலை பள்ளி, லிட்டில் பிளவர் மேல்நிலை பள்ளி உள்ளிட்ட 15 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 7 ஆயிரத்து 389 மாணவ மாணவியர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.