நாகர்கோவில், மே 24 : தென் மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தென் மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளி மண்டல சுழற்சிகள் நிலை கொண்டதால் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் சாரல் மழை நீடித்து வருகிறது. நேற்று முன் தினம் முதல் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பதிவாகி உள்ளது. மலையோர பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. கொட்டாரம் 16.6. மில்லி மீட்டர், மயிலாடி 2.2, நாகர்கோவில் 2.2, கன்னிமார் 3.2, ஆரல்வாய்மொழி 1.2, பூதப்பாண்டி 5.2, முக்கடல் 5, பாலமோர் 9.4, தக்கலை 11.8, குளச்சல் 11.2, இரணியல் 8, குருந்தன்கோடு 6, கோழிப்போர்விளை 20.6, மாம்பழத்துறையாறு 10, ஆனைக்கிடங்கு 11.2, சிற்றார்1, 6, சிவலோகம் (சிற்றார்2) 6.8, களியல் 12,4, குழித்துறை 6.2, பேச்சிப்பாறை, 1.4, பெருஞ்சாணி 7.4, புத்தன் அணை 7, சுருளகோடு 8.2, திற்பரப்பு 17.2, முள்ளங்கினாவிளை 12.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பேச்சிப்பாறை நீர் மட்டம் 35.38 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 36.3 அடியாகவும் உள்ளது.
பேச்சிப்பாறை அணைக்கு 189 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 73 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. திற்பரப்பில் அதிக தண்ணீர் கொட்டியதால், சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால் அதன் ஈரப்பதம் மிகுந்த அரபிக்கடல் ஈர காற்றை கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் கொண்டு வந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் மோதும் காரணத்தால், குமரி மாவட்டத்தில் காற்று அதிக பகுதியான ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி பகுதிகள் தவிர்த்து பிற இடங்களில் அடுத்து வரும் 24 மணி நேரத்து நல்ல மழை இருக்கும். ஆரல்வாய்மொழி பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 35 கி.மீ. வேகத்தில் வீசும் வாய்ப்பு உள்ளது என குமரி மாவட்ட தனியார் வானிலை ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.