Monday, June 23, 2025
Home மருத்துவம்ஆலோசனை குப்பைகளையும் வளமாக்கலாம்

குப்பைகளையும் வளமாக்கலாம்

by kannappan

நன்றி குங்குமம் தோழிபிளாஸ்டிக்கினால் ஏற்படும் பயன்கள் சிலவாக இருந்தாலும் அதனால் உண்டாகும் பாதிப்புகளே அதிகம் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்களும்,  அறிவியலாளர்களும். இதனை தற்போது மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இருந்தாலும் அதனை முழுமையாக ஒழிப்பதென்பது அவ்வளவு சாதாரண  வேலையில்லை. அந்த அளவிற்கு பிளாஸ்டிக்கின் பயன்பாட்டினை அனுபவித்திருக்கிறோம். பிளாஸ்டிக்கையும், நாம் அன்றாட பயன்பாட்டிலிருந்து  குப்பைத் தொட்டியில் போடும் குப்பைகளையும் வளமாக்க முடியும் என்கிறார் சென்னையை சேர்ந்த அருள் பிரியா.“என்னுடைய சொந்த ஊர் உடுமலை. சென்னையில் எட்டு ஆண்டுகள் எச்.சி.எல். நிறுவனத்தில் வேலை பார்த்தேன். இரண்டாவது குழந்தை பிறந்த  பிறகு என்னால் வேலையை தொடர முடியவில்லை. தினமும் வேலைக்கு சென்றுவிட்டு ஒரு நாள் எதுவுமே இல்லாமல் வீட்டில் இருக்கும் போது  பயங்கரமா போர் அடிச்சது. என்ன செய்யலாம்ன்னு இருக்கும் போது, எங்க குடும்பத்தில் காய்கறி, பழங்கள் விரும்பி சாப்பிடுவது வழக்கம். அதன்  கழிவுகளை பிளாஸ்டிக் கவரில் போட்டு, குப்பைத் தொட்டியில் போட்டு வந்தோம். இதை வீணாக்காமல், எப்படிப் பயன்படுத்தலாம் என்ற அறிவியல்  தேடலில் யோசிக்க ஆரம்பித்தேன். இது சம்பந்தமாகப் பலரிடம் கேட்கும் போது அவர்கள் சொன்ன ஒரே வார்த்தை ‘கம்போர்ஸ்டிங்’. வேலூரை சேர்ந்த ஸ்ரீனிவாசன் நீண்டகாலமாக இதை செய்து வருவதாக கேள்விப்பட்டேன். அவரின் தொடர்பினை ேதடிப் பிடித்தேன். அவரிடம் பேசிய  போது, அவர் “நாம் இறந்த பின் எப்படி கார்டீயா நான்கு மணி நேரத்தில் இயங்குமோ, அதே போல் நம் லைஃப் டைம் வேஸ்ட் 12 மணி நேரம்  இயங்கும். உதாரணமாக தர்பூசணியை சாப்பிட்டு, அதன் தோலை 12 மணி நேரத்திற்குள் மாட்டுக்கு கொடுத்தால் அது உணவு. அதை சாப்பிடும் மாடு  சாணமாகப் போடும். அதிலிருந்து பையோ கேஸ், உரம் போன்றவற்றிற்குப் பயன்படுத்தலாம். தற்போது அதன் சுழற்சி முடிந்துவிடும். மாடு சாப்பிட  முடியாததை கோழி சாப்பிடும். கோழி சாப்பிட முடியாததை தவளை சாப்பிடும். தவளை சாப்பிட முடியாததை சின்னச் சின்ன பூச்சிகள் சாப்பிடும்… எனவே எதுவும் வீணாகக் கூடிய  பொருள் அல்ல. சாலையில் குப்பைத் தொட்டியில் கிடக்கும் எல்லாம் வளங்களே” என்று எனக்கு புரியவைத்தார். அவர் சொன்னதை என் அப்பார்ட்  மெண்டில் இருக்கும் பெண்களிடம் எடுத்துக் கூறினேன். அவர்களும் ஒத்துழைப்பதாக கூறினர். முதலில் எல்லாருடைய வீட்டில் இருக்கும் காய்கறி  மற்றும் பழக்கழிவுகளை சேகரித்தேன். சேகரித்து அப்படியே வைக்க முடியாது. அதை உரமாக மாற்றணும். அதற்கு கம்பா என்ற மண் தொட்டி உள்ளது.  அதை வாங்கி அதில் இந்த கழிவுகளை போட ஆரம்பிச்சோம். இது மூன்று அடுக்கு தொட்டி என்றாலும், அதை குடியிருப்பில் வைத்தால், துர்நாற்றம் வீசுமே என்று சிலர் எதிர்த்தனர். இதனையடுத்து நான் வசித்து  வந்த எம்.ஆர்.சி நகரில் ஓ.எஸ்.ஆர் கிரவுண்டில் இதை அமைக்க திட்டமிட்டோம். இது பொது இடம் என்பதால், நாம் இஷ்டம் போல் செய்ய முடியாது.  அதனால் மாநகராட்சி அலுவலகத்தில் இது குறித்து முறையிட்டோம். அவர்களோ, அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களிடம் ஒப்புதல் கடிதம் வாங்கி  வரச்சொன்னார்கள். ஆனால் அவர்களும் அதை புரிந்து கொள்ள முன் வரவில்லை’’ என்றவர் அதன் பிறகு தான் மாடல் நகரத்தை உருவாக்கியுள்ளார். ‘‘எங்கு திரும்பினாலும் நமக்கான கதவு மூடப்படுகிறதே என்ற யோசனையில் இருந்த போது தான் மாநகராட்சியின் கமிஷனராக இருந்த விக்ரம் கபூர்,  எங்களின் ஆர்வத்தைப் பார்த்து, நாங்கள் வசிக்கும் இடத்தை மாடல் நகரமாக மாற்ற சொன்னார். அதோடு நில்லாமல் மக்கும் குப்பைகள், மக்கா  குப்பைகளை பிரிக்க 250 குப்பைத் தொட்டிகளும் கொடுத்தார். நாம் குப்பைகளை பிளாஸ்டிக் கவரில் வைத்துத்தான் தூக்கிப் போடுகிறோம். அதில்  காய்கறி கழிவுகள் முதல் பால் கவர், சானிட்டரி நாப்கின் வரை எல்லாமே ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் குப்பையில் இருக்கும் கழிவுகளில் எது  உணவு, எது பிளாஸ்டிக் என்பது மாட்டுக்கு தெரியாது. வாசத்தை தான் உணர்ந்து அது சாப்பிடும். உணவுக் கழிவுகள் இருக்கும் பிளாஸ்டிக் கவரோடு சேர்த்து சாப்பிடும் போது அது அவற்றின் வயிற்றில்  அப்படியே தங்கிவிடும். விளைவு அது மாடுகளின் மரணத்துக்கே காரணமாகிவிடும். இப்படி இறந்த மாடுகளின் சடலங்களை நாம் சென்னையில் உள்ள  கொடுங்கையூர், பெருங்குடி, பள்ளிக்கரணை போன்ற இடங்களில் பார்க்கலாம். ஒரு வீட்டில் ஒரு கிலோ குப்பை என்றால், ஒவ்வொரு குப்பை  கிடங்கிலும் எவ்வளவு இருக்கும் என்பதைக் கணக்குப் போடுங்கள். இப்படி கொட்டப்படும் குப்பைகளில் இருந்து லீச்சட் என்கிற தண்ணீர் வெளியேறும்.  அது நிலத்தினுள் போகும் போது நிலத்தடி நீர் பாதிக்கிறது. குப்பைகளை தீயிலிட்டு எரிக்கும் போது காற்று மாசடைகிறது. ஆய்வு ஒன்றில், குப்பைக் கிடங்குக்கு அருகில் வசிக்கும் பெண்களுக்கு கரு  உருவாகுவதில்லை என்கிறது. அந்த அளவிற்குப் பிரச்சினை உள்ளது. நிலத்தைத் தான் இப்படி சீரழித்திருக்கிறோம் என்றால், கடல் இதை விட  கொடுமையா உள்ளது. கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுகிறோம். இதை சாப்பிடும் கடல் உயிரினங்கள் இறக்கவும் நேரிடுகிறது. இந்தியப்  பெருங்கடலில் ஒரு தீவாகவே பிளாஸ்டிக் உருவாகியுள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது, பிளாஸ்டிக்கிற்கு மாற்று நிறைய இருக்கிறது. அதை  ஏன் நாம் முயற்சிக்கக் கூடாது என்று யோசித்தேன். என் அப்பார்ட்மெண்டில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடந்தால் தெர்மாகோல் தட்டுகளை பயன்படுத்துவது வழக்கம். பெட்ரோலியம் பொருட்கள் மூலம்  தயாரிக்கப்படும் இத்தட்டுகளில் சூடான உணவுகள் வைத்தால் உடனே ரியாக்ட் ஆகும். இது ஆயிரம் வருடம் ஆனாலும் மக்காது. இதற்கு மாற்று  பாக்கு மட்டை மற்றும் கரும்பு சக்கை தட்டுகள் உள்ளன. ஆனால் என்னதான் நாம் மாற்று கண்டுபிடித்தாலும், மக்கள் மத்தியில் இதற்கான  விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. அதை அவர்களுக்கு புரியும்படி சொல்ல ஆரம்பிச்சேன். அது தான் ‘நம்ம பூமி’ உருவாக காரணம்’’  என்றவர் அதன் பயன்பாட்டை பற்றி விவரித்தார். ‘‘நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக்கை தவிர்க்க முடியாது. நாம் பயன்படுத்தும் அத்தியாவசியமான பொருட்களான பேனா, செல்போன்  என எல்லாவற்றிலும் பிளாஸ்டிக் இருக்கிறது. இதில், ஒரே ஒருமுறை மட்டுமே பயன் படுத்தப்படும் பிளாஸ்டிக்கினால் தான் பிரச்னையே… வீணான  காய்கறிகளை வீட்டின் தோட்டத்தில் போடுவோம். அது உரமாகும். தற்போது போடுவதற்கான இடமும் இல்லை, அப்படியே போட்டாலும் பிளாஸ்டிக்  பையில் கட்டி போடுகிறோம். இதனால் மாற்றம் ஏற்படப் போவதில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு லெமன் ஜூஸ் போட்டுக் கொடுத்தோம். மீதமான எலுமிச்சைப் பழத்தை பாத்திரம் தேய்க்க பயன்படுத்தினோம்.இப்போது எல்லாமே பெட் பாட்டில் குளிர்பானங்கள்தான். அரசும் மக்கும் குப்பை,  மக்கா குப்பையை பிரித்து போடுங்கள் என்று சொல்லி வருகிறது. ஆனால், யாருக்கும் எதுவும் புரியவில்லை. தற்போது விஸ்வரூபமாக எடுத்திருக்கும்  இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் யார் காரணம்? நாம் தான். அதற்கான தீர்வும் நாம் தான் செய்ய வேண்டும். அதனால் அதை முதலில் என் வீட்டில்  இருந்து ஆரம்பிக்க நினைச்சேன். குப்பைகளை பிரிச்சேன்’’ என்றவர் குப்பைகளை எவ்வாறு பிரிக்க வேண்டும்? அதை என்ன செய்ய வேண்டும் என்று  விளக்கினார். ‘‘மக்கும் குப்பை: இயற்கை யிலிருந்து என்னென்ன பொருட் கள் எல்லாம் வருகிறதோ, அதை இயற்கையே திரும்பி எடுத்துக் கொள்ளும். அதுதான்  மக்கும் குப்பை. காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள்.மக்காத குப்பை: பிளாஸ்டிக், அலுமினியம்…மனித கழிவுகள் : பேண்டேட், சானிட்டரி நேப்கின், முடி, நகம்…இந்த ஒவ்வொரு குப்பை களுக்கும் தனிப்பட்ட தீர்வு உண்டு. மக்கும் குப்பையை கம்போர்ஸ்டிங் என்பதன் மூலம் உரமாக்கலாம். ஹோம்  கம்போர்ஸ்டிங் முறையில் வீட்டிலேயே வீணான காய்கறி கழிவுகளை வைத்து உரமாக்க முடியும். ஒரு பங்கு காய்கறி வேஸ்ட்டுக்கு இரண்டு பங்கு  கார்பன். இது தேங்காய் நாரினால் உருவாகியிருக்கும். இதில் தேவையான அளவு இயற்கை உரமும் சேர்ந்திருக்கும். 15 நாட்களுக்கு ஒரு முறை  மாற்றும் போது 45 நாட்களில் தரமான உரம் கிடைக்கும். இதை கிலோ 2 ரூபாய் என்று நாங்களே எடுத்துக் கொள்கிறோம். இல்லை என்றாலும் பக்கத்தில் இருக்கும் மண்ணில் போடும் போது  மண் வளமும் அதிகரிக்கிறது. இப்படி வீட்டிற்கு ஒரு தொட்டி வைத்தாலே 60%  கழிவுகள் உரமாக மாறும். பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்பலாம். பால் கவர் மற்றும் இன்று பல பொருட்களை பிளாஸ்டிக்கிலேயே பேக்  செய்து வாங்குகிறோம். பிளாஸ்டிக் மட்டும் தனியாக பிரித்து பேப்பர் காரங்களுக்கு, ஏஜென்சிக்கு, ஏன் குப்பைத் தொட்டிகளில் பேப்பர்  பொறுக்குபவர்களுக்குக் கூட போடலாம்.  ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பைக்கு பதில் துணிப்பைக்கு மாறுங்கள். சின்னச் சின்ன பழக்கவழக்க மாற்றம் செய்ய வேண்டும். சானிட்டரி கழிவு. எனக்கு அடிபடும் போது  அதை துணியால் துடைக்கிறேன். அதே துணிவைத்து மறுபடியும் துடைக்க முடியுமா? அதெப்படி ஒரு சானிட்டரி நேப்கினால் மட்டும் ஆறு மணி நேரம்  ரத்தத்தை உள்வாங்கிக் கொள்ள முடியும். அந்தளவிற்கு ரசாயனம். இதை பயன்படுத்துவதால் பெண்களுக்கு சருமப் பிரச்னையில் துவங்கி கடைசியில்  கேன்சர் வரை கொண்டு போய் விடும் அபாயம் ஏற்படுகிறது. அதை நாம் சரியான முறையில் அழிப்பதும் இல்லை. இதற்கு என்னதான் மாற்று. அந்த காலத்தில் துணிதான் பயன் படுத்தினார்கள். அதையே கொஞ்சம் மாற்றம் செய்து துணியினால் ஆன சானிட்டரி   பேட் கொண்டு வந்திருக்கிறோம். மென்ஸ்சுரேஷனல் கப். இதை ஒரு  முறை வாங்கினால் பத்தாண்டுகளுக்குக் கூட பயன்படுத்தலாம்.  குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டயப்பர்களை தவிர்த்துவிட்டு மறுபடியும் பழங்காலத்துக்கு மாறுங்கள். தனி நபராக நாம் ஒவ்வொருவரும் எடுக்கும்  நடவடிக்கைகளிலே இருக்கிறது. மக்கள் பிரச்சினை இருக்கிறது என்பதை உணருகிறார்கள். அதற்கு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அதற்கான  வழிகாட்டுதலாக ஒரு சிறிய பங்காக நாங்கள் இருக்கிறோம் என்று நம்புகிறேன்’’ என்றார் அருள் பிரியா.– அன்னம் அரசு

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi