ஊட்டி, ஆக. 15: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை தந்தத்துடன் காட்டு யானை நடமாடி வருகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தற்போது வன விலங்குகளின் எண்ணிக்ைக அதிகரித்துள்ளது. காட்டு யானைகள், சிறுத்தை, புலி, கரடி போன்ற வன விலங்குகளின் எண்ணிகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வரும் போது, அடிக்கடி மனித விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் காட்டு யானைகள் தாக்கி பொதுமக்கள் காயம் அடைவது மற்றும் உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது.
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியார், மரப்பாலம் பகுதிகளில் தற்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இப்பகுதிகளில் உள்ள பலாப்பழ மரங்களில் பழங்கள் அதிகளவு காய்த்து உள்ளதால் பலாப்பழங்களை சாப்பிடுவதற்கு காட்டு யானைகள் இப்பகுதிகளுக்கு வருகின்றன. இது போன்று வரும் காட்டு யானைகள் சில சமயங்களில் கூட்டமாகவே அல்லது ஒற்றையாகவே சாலைகளில் நிற்பதால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 13வது கொண்டை ஊசி வளைவு அருகே ஒற்றை தந்தத்துடன் காட்டு யானை அடிக்கடி சாலைக்கு வருவதால், வாகன ஓட்டுநர்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும், யானை தற்போது அடிக்கடி சாலையில் உலா வருவதால், சுற்றுலா பயணிகள் யானையை புகைப்படம் எடுக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும், சாலையில் காட்டு யானை நடமாடி வருவதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் கவனமுடன் வாகனங்களை இயக்கவேண்டும். சாலை ஓரத்தில் காட்டு யானை நின்றால் செல்பி மற்றும் போட்டோ எடுப்பதை தவிர்க்கவேண்டும். மேலும், காட்டு யானையை தொந்தரவு செய்யக்கூடாது. மலை பாதையில் யானை நடமாட்டம் இருந்து வரும் நிலையில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் வாகனங்களை இயக்க வேண்டுமென்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.