குன்னூர், நவ.27 : குன்னூர் மலைப்பாதையில் நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்தால் பயணிகள் அவதியடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற சமவெளி பகுதிகளுக்கு பல்வேறு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று கோவையிலிருந்து 38 பயணிகளுடன் தாளுர் நோக்கி சென்ற அரசு பேருந்து குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் குன்னூர் அருகே பழுதாகி நடுரோட்டில் நின்றது.
இதனால் சிறிது நேரம் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கி பேருந்தை பின்னோக்கி தள்ளினர். இருப்பினும் பேருந்து இயங்காததால், பயணிகளை மாற்று பேருந்து மூலம் உதகை மற்றும் கூடலூருக்கு அனுப்பி வைத்தனர். மலைப்பாதையில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் சிறந்த முறையில் பழுது பார்த்து நல்ல முறையில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.