குன்னூர், ஜூன் 11: குன்னூர் மலைப்பாதையில் சிதறி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை குரங்குகள் உட்கொள்ளும் அவலம் நடக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள குளிர் பானங்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்கள் பயன்படுத்த தடை விதித்தது. அரசாணை நிலை எண் 84ன்படி சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை 2018ல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தமிழ்நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் தொடர் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருந்த போதிலும் சமவெளி பகுதியில் தயாரிக்கப்பட்டு, அடைக்கப்பட்டு வரும் பிளாஸ்டிக் பொருட்கள் நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நூடுல்ஸ், மேகி, குர்க்குரே போன்ற உணவு பொருட்கள் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகள் குன்னூர் மலைப்பாதையில் சிதறி கிடக்கின்றன. இன்கோ வண்டி உட்பட சில தனியார் வாகனங்கள் மூலம் தேனீர் கடை வைத்து நடத்தும் நபர்கள் சமவெளி பகுதிகளில் வரும் உணவு பொருட்களை பயன்படுத்திய பின்பு முறையாக குப்பை தொட்டியில் போடாமல் அருகில் வீசி செல்கின்றனர். அதுமட்டுமின்றி மலைப்பாதையில் நிரம்பி வழியும் குப்பைகளை தினமும் அகற்றப்படாமல் இருப்பதால் இவ்வாறு உள்ள குப்பைகளை மலைப்பாதையில் சுற்றிதிரியும் குரங்குகள் உட்கொள்வதோடு, சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, இனிவரும் காலங்களில் மலைப்பாதையில் செயல்பட்டு வரும் கடைகளில் வீணாகும் குப்பைகளை முறையாக குப்பை தொட்டிகளில் கொட்ட வேண்டும் என்றும், இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை நாள்தோறும் தூய்மை பணியாளர்கள் அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.