ஊட்டி, ஆக. 29: குன்னூர் பகுதியில் உள்ள 5 கிராமங்களை தத்தெடுத்து பல்வேறு மேம்பாட்டு பணிகளை கல்லூரி மாணவிகள் செய்து வருகின்றனர். மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி அன்று டெல்லியில் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் பதிப்பை தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதுமிருந்து 750 உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள், கிராமங்களை தத்தெடுப்பர். அதோடு மட்டுமல்லாமல் அக்கிராமங்களுக்குச் சென்று மக்களின் வாழ்க்கை முறைகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை அறிந்து கொள்வார்கள்.
மேலும், ஒவ்வொரு துறைகளில் 25 வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், பள்ளி தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி அடைதல், ஊரகப் பகுதிகளில் வருமானத்தை அதிகரித்தல், கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குதல், குப்பைகளை அகற்றுதல் ஆகியவற்றில் கிராமங்களுக்கு உதவிபுரிவது இத்திட்டத்தின் முக்கிய கூறுகளாக உள்ளது.
இதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள் மலை கிராமங்களுக்கு சென்று கணக்கெடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தினர். இதில், முதற்கட்டமாக பெள்ளட்டிமட்டம், சோலாடாமட்டம், சண்முகாநகர், அம்மன் நகர் மற்றும் எமகுண்டு ஆகிய 5 கிராமங்களை தேர்வு செய்து தத்தெடுத்தனர். கிராம மக்களின் தேவைகள் ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தி முதற்கட்டமாக குடிநீர் தேக்க தொட்டி ஒன்றை நிறுவியுள்ளனர்.
குன்னூர் அருகேயுள்ள பெள்ளட்டிமட்டம் கிராமத்தில் கிராம தலைவர் சுப்பிரமணி தலைமையில் கல்லூரி முதல்வர் ஷீலா மற்றும் செயலர் அல்போன்சா முன்னிலையில் குடிநீர் தொட்டி அமைத்தனர். கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில், வரலாற்று துறை மற்றும் வணிகவியல் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.