ஊட்டி,ஆக.24: குன்னூரில் சாலையை கடந்துச் சென்ற சிறுத்தை வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள்,குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளான நாய் மற்றும் கால்நடைகளை வேட்டையாடி செல்கின்றன.
இதனால், பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து, குன்னூர் அருவங்காடு பாலாஜி நகர் பகுதிகளில் வனத்துறை சார்பில் சிறுத்தையை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிப்பு கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள ராணுவ பகுதியான கூர்கா கேம்ப் பகுதியில் சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்ற காட்சியை அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எனவே, கூர்கா கேம்ப் பகுதியில் வலம் வரும் சிறுத்தையையும் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.