குன்னூர், மே 21: ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்த பிக் அப் வாகனம் குன்னூர் பெட்டட்டி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பின்புறமாக வந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் ஆதிகோப்புலா கிராமத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் 3 பிக் அப் வாகனங்களில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். பிக் அப் வாகனத்தை டிரைவர் மல்லிகார்ஜுனா (31) என்பவர் ஓட்டியுள்ளார்.
ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்ட பின் நேற்று முன்தினம் மாலை குன்னூர் சிம்ஸ் பூங்காவை பார்வையிட்டனர். தொடர்ந்து, பவானி கூடுதுறை செல்வதற்காக குன்னூர் – கோத்தகிரி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பெட்டட்டி சுங்கம் அருகே வளைவான பகுதியில் சென்ற போது மல்லிகார்ஜுனா ஓட்டி சென்ற பிக் அப் வாகனம் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து சரிவான சாலையில் பின்புறமாக வந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் காயமடைந்தவர்களை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவ்விபத்தில், காயமடைந்த 18 பேரில், 2 பேர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குன்னூர் மருத்துவமனையில் 6 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான காயமடைந்தவர்கள் புறநோயாளி பிரிவில் சிகிச்சை பெற்று சென்றனர். இவ்விபத்து குறித்து வெலிங்டன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.