நன்றி குங்குமம் டாக்டர்பலரையும் அவதிப்படுத்தும் ஒரு பிரச்னையாக இருக்கிறது குதிகால் வலி. அதிலும் ஆண்களை விட பெண்களை அதிகமாகவே குதிகால் வலி பாதிக்கிறது. முதுமை, உடல் பருமன் மற்றும் நீண்ட நேரம் நின்றபடி வேலை செய்வது போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது. இதற்கு என்ன தீர்வு?!கால்களின் கட்டை விரல் முதல் இணைக்கும் திசுக்களின் வரிசையில் ஏற்படும் வீக்கம், அதன் காரணமாக ஏற்படுகிற வலியே குதிகால் வாதம் எனப்படுகிறது. இதைக் கொஞ்சம் தெளிவாகப் புரிந்துகொள்வோம்.பாதங்களில் இருக்கும் அடர்த்தியான நார்த்திசுக்களுக்கு Fascia என்று பெயர். இந்த நார்த்திசுக்கள் குதிகால் முதல் கட்டை விரல் வரை காணப்படும். இந்த திசுக்களே தசைகளுக்கும், பாத வளைவுக்கும் ஆதரவாக இருப்பவை. இவை அதிகமாக இழுக்கப்படும்போது அந்த பகுதியில் நுண்ணிய கிழிசல்கள் ஏற்படலாம். இதுவே அப்பகுதியில் ஏற்படும் வலிக்கும், வீக்கத்துக்கும் காரணம்.அறிகுறிகள் என்ன?பாதங்களின் அடிப்பகுதியில் கடுமையான வலி இருக்கும். குறிப்பாக, குதிகால் எலும்பின் முன் அல்லது நடுப்பகுதியில் வலி உணரப்படும். காலையில் தூங்கி கண் விழிக்கும்போது சிலர் இந்த வலி அதிகமாக இருப்பதை உணர்வார்கள். ஆங்கிலத்தில் இதை First-step pain என்று சொல்வதுண்டு. நீண்ட நேரம் உட்கார்ந்திருந்து விட்டு எழுந்து நிற்கும்போதும் இந்த வலி அதிகமாக இருப்பதாக உணர்வார்கள். உடற்பயிற்சி செய்த பிறகும் சிலருக்கு இந்த வலி அதிகமாக தெரியும்.யாருக்கெல்லாம் வரும்?குதிகால்களைத் தாங்கும் பகுதி தேய்ந்து போன நிலையில் உள்ள ஷூக்களை அணிகிறவர்கள், தட்டையான பாதம் அல்லது குதிகால் வளைவு அதிகம் உள்ளவர்கள், ஹைஹீல்ஸ் செருப்பு அணியும் பழக்கம் உள்ளவர்கள், கால்களின் அமைப்பில் அசாதாரண நிலை உள்ளவர்கள் மற்றும் நடையில் பிரச்னை உள்ளவர்களுக்கு குதிகால் வலி ஏற்பட அதிக சாத்தியம் உண்டு.;எப்படி கண்டுபிடிப்பது?பாதங்களின் மென்மையான பகுதியை பரிசோதித்துப் பார்த்தே உங்களுக்கு குதிகால் வாதம் பிரச்னை இருக்கிறதா என்பதை மருத்துவர் உறுதி செய்வார். எந்த இடத்தில் வலி அதிகமாக உணரப்படுகிறது என்பதை வைத்து பிரச்னைக்கான காரணத்தையும் அவர் ஓரளவு கணித்து சொல்லிவிடுவார். இந்த நிலையில் எக்ஸ் ரே மாதிரியான வேறு பரிசோதனைகள் தேவைப்படாது. அரிதாக சிலருக்கு எம்.ஆர்.ஐ செய்ய பரிந்துரைப்பார். அதன் மூலம் குதிகால்களில் நரம்புகள் ஏதும் அழுத்தப்பட்டு இருக்கின்றனவா என்பதை கண்டுபிடிப்பார்.காலையில் எழுந்ததும்; குதிகால் பகுதியில் கடுமையான வலியை உணர்பவர்களுக்கு குதிகால் வாதம் இருப்பது ஓரளவு உறுதி செய்யப்படும். கட்டைவிரலையும், குதிகாலையும் இணைக்கும் இந்த திசு பகுதியில் ஏற்படும் அழற்சி ஓட்டப்பந்தய வீரர்களுக்கு மிகவும் சகஜம். சரியான முறையான சிகிச்சையின் மூலம் இந்த பிரச்னையை சில மாதங்களுக்குள்ளாகவே முழுமையாக குணப்படுத்தி விடலாம்.சிகிச்சைகள்…முதல் கட்டமாக Non-steroidal anti-inflammatory drugs பரிந்துரைக்கப்படும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சில வாரங்களுக்கு இதை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கும். இந்த சிகிச்சையில் வலி குறையவில்லை என்றால் அடுத்த கட்டமாக ஸ்டீராய்டு ஊசி போட மருத்துவர் பரிந்துரைக்கலாம். இந்த ஊசியை போடுவதன் மூலம் வலியும், வீக்கமும் குறிப்பிட்ட சில மாதங்கள் வரை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். மருந்து மற்றும் ஓய்வில் வலி குறையவில்லை என்றால் அடுத்த கட்டமாக பிசியோதெரபி செய்ய சொல்லி மருத்துவர் பரிந்துரைப்பார். பிசியோதெரபிஸ்ட் உங்களுக்கு வலியுள்ள பகுதிகளை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகளை கற்றுத் தருவார்.மேற்சொன்ன எந்த சிகிச்சையிலும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் வேறு சில சிகிச்சைகளை அறிவுறுத்தலாம். அதில் முக்கியமானது ஷாக்வேவ் தெரபி (Shock wave therapy). ஒலி அலைகளை பயன்படுத்தி செய்யப்படுகிற இந்த சிகிச்சையின் மூலம் பாத பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கப்படும். அதன் மூலம் பாதிப்படைந்த திசுக்கள்; ஆறுவதுடன் வலியும் குறையும்.அடுத்தது Tenex procedure எனப்படுகிற சிகிச்சை முறை. வலியுள்ள பகுதியில் லேசாக கீறி அல்ட்ரா சவுண்ட் உதவியுடன் மிக சில நிமிடங்களில் செய்து முடிக்கப்படுகிற சிகிச்சை இது. பத்தே நாட்களில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வைக்கும் சிகிச்சையும் கூட.கடைசி தீர்வாக அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும். அறுவை சிகிச்சை முடிந்த அன்றைக்கே வீடு திரும்பலாம். குறிப்பிட்ட நாட்களுக்கு கால்களில் ஸ்பிளின்ட் (Splint) அணிவது மற்றும் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது போன்றவை பரிந்துரைக்கப்படும். நோயாளி என்னவெல்லாம் செய்யலாம்? என்னவெல்லாம் செய்யக்கூடாது?வலி குறையும் வரை போதுமான அளவு ஓய்வு எடுக்க வேண்டும். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வலி உள்ள பகுதியில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கூட செய்யலாம். கால்களில் நேரடியாக ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுப்பதை தவிர்க்கவும். கால்களின் கீழ் பகுதிக்கும் பாதங்களுக்குமான பயிற்சிகளை செய்யவும். கால்களுக்கு சப்போர்ட் கொடுக்கவும், வலி அதிகரிக்காமல் தடுக்கவும் Athletic டேப் பயன்படுத்தவும். ஷூ அணியும்போது குதிகால் பகுதிகளுக்கு பாதுகாப்பளிக்கும் insoles வாங்கி பயன்படுத்தவும். இரவு தூங்கும்போது அணியக்கூடிய Night splints உதவியாக இருக்கும்.குதிகால் வலியைத் தவிர்க்க முடியுமா?சராசரியை விட அதிக எடை உள்ளவர் என்றால் எடையை குறைக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் அணியும் ஷூக்களை மாற்றவும். ஹை ஹீல்ஸ் அணிவதை தவிர்க்கவும். காலணி அணியாமல் கடினமான தரைப்பகுதியில் நடப்பதை தவிர்க்கவும். குறிப்பாக, காலையில் கண் விழிக்கும்போது பாதங்களில் வலியை உணர்பவர்கள் வீட்டுக்குள்ளேயும் செருப்பு அணிந்து நடப்பதே பாதுகாப்பானது. நீச்சல், சைக்கிளிங் போன்ற பயிற்சிகள் வலியை அதிகரிக்காது. அதேநேரம் ரன்னிங், ஜம்பிங் போன்ற பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது.( விசாரிப்போம் ! )எழுத்து வடிவம்: எம்.ராஜலட்சுமி
குதிகால் வலிக்கு தீர்வு
previous post