ஈரோடு, ஜூலை 1: ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து கே.என்.கே. சாலை வழியாக, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் சென்று வருகின்றன. இந்நிலையில், கே.என்.கே. சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது.
குறிப்பாக ஒரு இடத்தில் ஏற்பட்டுள்ள ராட்சத குழியால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுகின்றனர். இங்கு சிவப்பு நிறத்தில் ஒரு சிறிய அளவிலான துணியை, அப்பகுதி சாலையோர மக்கள் நட்டிருந்தாலும் கூட, இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்குவது தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, கே.என்.கே சாலையில் குண்டும் குழியுமாக உள்ள இடத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.