பெரும்புதூர், ஜூன் 19: குண்டுபெரும்பேடு – ஒட்டங்காரணை இடையே கடந்த 3 மாதங்களாக சாலைப்பணி கிடப்பில் போடப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் ஒன்றியத்தில் கடுவஞ்சேரி, ஒட்டங்கரணை, குண்டுபெரும்பேடு ஆகிய கிராமங்களில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி, மக்களின் போக்குவரத்திற்கு குண்டுபெரும்பேடு முதல் கூடுவாஞ்சேரி வரை 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராம சாலை உள்ளது. இந்த, சாலை கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து காணப்பட்டது. இவ்வாறு, சேதமடைந்த சாலையை அகற்றி புதிய சாலை அமைக்கும் பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால், தற்போது வரை தார்சாலை அமைக்கப்படாமல், ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இச்சாலையை பயன்படுத்தி செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது அடிக்கடி டயர்கள் பஞ்சர் மற்றும் பழுது ஏற்படுவதோடு, ஜல்லி கற்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் இடறி விழுந்து விபத்தில் சிக்கி வருவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே, கடந்த 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளை, மீண்டும் தொடங்கி இப்பணியனை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
குண்டுபெரும்பேடு – ஒட்டங்காரணை இடையே கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி: வாகன ஓட்டிகள் கடும் அவதி
0