கடலூர், ஜூன் 3: கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் ஸ்ரீபிரியா மற்றும் போலீசார் கடந்த மாதம் 13ம் தேதி கடலூர் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ரவி மகன் ராகுல் என்கிற வெட்டு ராகுல் மற்றும் காகா என்கிற விஜயராஜ் ஆகியோரை பிடித்து சோதனை செய்தபோது 1 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் இரண்டு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராகுல் மீது குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் என மொத்தம் 4 வழக்குகள் உள்ளன. இவரது தொடர் குற்றசெயலை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் பரிந்துரையின்பேரில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதன்பேரில், குண்டர் தடுப்பு காவலில் கடலூர் மத்திய சிறையில் ராகுல் அடைக்கப்பட்டார்.