மயிலம், பிப். 23: மயிலம் அடுத்துள்ள பெரமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் பாலமுருகன் (9). இவர் இரட்டனையில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று கோவிந்தசாமி தனது குடும்பத்தினருடன் கோபாலபுரம் அருகே உள்ள அவரது விவசாய நிலத்தில் பணியில் இருந்தபோது பாலமுருகன் அருகில் உள்ள மீன் குட்டையில் இறங்கி விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பாலமுருகன் இறந்த நிலையில், அவரது பெற்றோர் பாலமுருகனை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்த போது மீன் குட்டையில் பாலமுருகன் சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மயிலம் போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.