சென்னை, ஜூலை 10: சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தததாக கடந்த 7 நாட்களில் 60 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாநகர காவல் எல்லையில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தி வரும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் கடந்த 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடந்த குட்காவுக்கு எதிரான சோதனையில், வெளிமாநிலங்களில் இருந்து குட்கா கடத்தி வரப்பட்டும், பதுக்கி வைத்திருந்ததாக தனித்தனியாக 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 1,899 கிலோ குட்கா பொருட்கள், 2.82 கிலோ மாவா, 8 செல்போன்கள், ரூ.58,340 பணம், 2 பைக்குகள்,ஒரு ஆட்டோ, மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக, திருவொற்றியூர் பகுதியில் கடந்த 7ம் தேதி குட்கா பொருட்கள் வைத்திருந்ததாக முத்துபாண்டி, ராஜி, ராம்பாலி யாதவ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 503 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.