ஓசூர், நவ.10: கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வெங்கடேசன் அறிவுரையின் பேரில், ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் (தளி) சந்தோஷ்குமார், (காவேரிப்பட்டணம்) அஷ்வினி, தேன்கனிக்கோட்டை எஸ்ஐ பட்டு மற்றும் போலீசார் தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், மளிகை மற்றும் பெட்டி கடைகளில் கூட்டாய்வு மேற்கொண்டனர். அப்போது, சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து குட்கா, பான்மசாலா பொருட்களை விற்ற 10 கடைகள் மூடப்பட்டது. ஓசூர் வட்டம் மற்றும் கெலமங்கலம் வட்டார பகுதிகளில், இதுவரை 86 குட்கா கடைகள் மூடப்பட்டு, கடைக்கு தலா ₹25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது, நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டு, கடை உரிமம் ரத்து செய்வதோடு, கடைகள் நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்படும் என உணவுப்பாதுகாப்பு துறை மற்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.