செங்கல்பட்டு,பிப்.18: செங்கல்பட்டு அண்ணாநகர் பகுதி 2வது குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் பாஸ்கரன் (45). இவர் செல்போன் சர்வீஸ் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த பத்மாவதி (40) என்பவருக்கும் 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு 2வயதில் ஆண்குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், பாஸ்கரன் மதுபோதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு மனைவியை அடிப்பதும் தினமும் தகராறில் ஈடுபடுவதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மனைவி பத்மாவதியை தாக்கியுதால் குழந்தையை அழைத்துக்கொண்டு சென்னை திருவான்மியூரில் உள்ள தனது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதற்கிடையில் நேற்றுமுன்தினம் இரவு பாஸ்கரன் தனது படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும் செங்கல்பட்டு நகர போலீசார் பாஸ்கரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.