Monday, June 17, 2024
Home » குடும்பமாக ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்

குடும்பமாக ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்

by kannappan

நன்றி குங்குமம் தோழிவரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்  என விவசாயம் சிறந்தால் ஒரு நாடே உயர்வடைந்து  செழிப் புடன் இருக்கும் என்று அன்றே பாடிச் சென்றார் ஒளவையார்! நாட்டு வளம் பற்றி குறிப்பிடும் சங்க இலக்கிய பாடல் ஒன்றில்… நன்றாக  விளைந்த தென்னங்கீற்று ஒன்று தென்னை மரத்தில்  இருந்து கீழே விழும்போது, அதன் கீழ் அருகே உள்ள கமுகு மரத்தின் தேனடைகளைக் கீறிக்கொண்டு கீழ் நோக்கி விழ, அதற்கு  அடுத்தாற்போல் உள்ள பலா மரத்தின் பலா பழத்தை பிளந்து அதன் சுளைகளோடு சேர்ந்து, அடுத்துள்ள மாமரத்தின் கொப்பில் உள்ள  மாங்கனிகளைக் கீறி, அதற்கு அடுத்துள்ள வாழை மரத்தின் குலைகளில் வீழ்ந்தது எனக் குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த மாதிரியான  ஒரு உணர்வைத் தரும், ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் ஒன்றை மேற்கொண்டு, ஒரு விவசாயி எப்படி நஷ்டம் இல்லாமல்,  இழப்பின்றி விவசாயம் செய்வது என்பதை கோவை மாவட்டம் துடியலூருக்கு மிக அருகே பன்னீர்மடையில் காண நேர்ந்தது. அது குறித்து நம்மிடம் குடும்பமாக இணைந்து விவரித்தனர் விவசாயி கிருஷ்ணமூர்த்தி-மல்லிகா தம்பதியினர். அவர்களைத்  தொடர்ந்து நம்மிடம் பேசினர் பொறியியல் பட்டதாரியான அவரது மகன் பொன்ராஜ் பிரபு மற்றும் எம்.பி.ஏ. படித்த மருமகள் ராஜேஸ்வரி  தம்பதியினர். இவர்கள் குடும்பமாக இணைந்து முழுநேரமும் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். விவசாயத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள  வருபவர்களுக்கு தங்கள் விவசாய  நுணுக்கங்களை மிகவும் சிறப்பாக விளக்குகின்றனர்.‘‘எங்களின் முக்கியத் தொழில் விவசாயம்.  அதாவது ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம். எங்களிடம் விவசாயத்தைச் சார்ந்து ஒரு 15 தொழில்கள் கைவசம் உள்ளது. மீன் வளர்ப்பு, வாத்து, நாட்டுக்கோழிகள் வளர்ப்பு, ஈமு கோழி வளர்ப்பு, புறா வளர்ப்பு, லவ் பேர்ட்ஸ், முயல் வளர்ப்பு, செம்மரி  ஆடு, வெள்ளாடு வளர்ப்பு, மாட்டுப் பண்ணை, பன்றி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு,  நமது பாரம்பரிய வித்தை நாமே போட்டு நாத்து வளர்த்து விற்பனை செய்யும் நர்ஸரி என இத்தனை இயற்கை சார்ந்த விவசாயப்  பண்ணை எங்களிடம் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இவற்றில் நமக்குத் தேவைப்படும் எதையாவது ஒரு ஐந்தினை எடுத்துச் செய்தால், முதன்மைத் தொழிலான விவசாயத்தில் நஷ்டம்  வந்தாலும்  துணைத் தொழில்களில் வரும் லாபம் நமது நஷ்டத்தை ஈடு செய்யும்.மாடு, ஆடுகளின் சாணம், புழுக்கை போன்றவை  இயற்கை உரமாகவும், கலப்பிடம் இல்லாத பசும்பால் நேரடி விற்பனைக்கும், ஆடு, முயல், வான் கோழி போன்றவை உணவு  நிலையங்களில் பிரியாணிக்கு, மண்புழு உரம் கருப்பு வைரமாக மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம், விவசாயத்திற்கு, தேனீ வளர்ப்பின்  மூலம் கலப்பிடம் இல்லாத சுத்தமான தேன், ஈமு கோழி முட்டைகள் மருந்தாக மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு என  அனைத்திலும் வருமானம் பார்க்கலாம்.மேலும் எங்களிடம் உள்ள நான்கரை ஏக்கர் விவசாய நிலத்தில் 25க்கு 25 என நான்காக  நிலத்தைப் பிரித்து பல வகையான முக்கிய பணப் பயிர்களையும், ஊடு பயிர்களையும் விவசாயம் செய்கிறோம். முதலில் ஒரு வரிசை  தென்னை மரம், அதற்கு நடுவே இரண்டு வரிசை பாக்கு, பாக்கிற்கு நடுவே காஃபி பயிர்கள், கூந்தப்பனை என பணப் பயிற்களாக நட்டு  வைத்துள்ளோம். காற்று, மழை என ஏதாவது ஒரு பயிர் சாய்ந்தாலும் மீதி இருப்பவை நம்மைத் தாங்கும். இதனால் விவசாயத்தில் பெரிதாக இழப்பு  வராது. ஒன்று போனால் ஒன்று கண்டிப்பாக நமக்கு கை கொடுக்கும். மீதிப் பகுதிகளில் ஒரு பக்கம் வரிசையாக வாழை மரங்கள்,  கரும்பு, மக்காச்சோளம், தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம், வெண்டை, கீரை வகைகள், கொடிவகைக் காய்கறிகள், தட்டப் பயறு,  மொச்சை, காலி ஃப்ளவர், கத்தரி, சுண்டை, அவரை என 3 மாத ஊடுபயிர்களையும் அடுத்தடுத்து விளைவிக்கிறோம். ஆரஞ்சு, மாதுளை,  பப்பாளி, கொய்யா, முள் இல்லாத சப்பாத்திக் கள்ளி (கால்நடைகளுக்கு), ஆடு, மாடு, கோழிகளுக்கான தீவனப் பயிர்களையும் ஒரு  பகுதியில் விளைவிக்கிறோம்.எங்களின் பண்ணை விளைச்சலில்  வரும் பயிர்களுக்கு நோய் தாக்குதல் இருக்காது. அத்தனையும்  இயற்கை உரங்கள். ஒட்டுப் பயிர் இல்லாத ஆர்கானிக் பயிர்கள் என்பதால் எங்கள் பண்ணையில் விளையும் தென்னை, காஃபி, வாழை,  தேன் மற்றும் காய்கறிகளுக்கு மக்களிடம் கிராக்கி மிகமிக அதிகம். பண்ணைக்கே நேரடியாக வந்து கொள்முதல் செய்கின்றனர்.விவசாயத்தின் முக்கிய ஆதாரமான உரத் தயாரிப்பிற்கு வித்தியாசமான ஒருங் கிணைந்த ஒரு உரத் தயாரிப்பு முறையை  முன்மாதிரியாக நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம். இதற்காக அரசிடம் இருந்தும், விவசாயம் சார்ந்த பல நிறுவனங்களிடம் இருந்தும்  பல விருதுகள், சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறோம். எங்களின் செயல்பாட்டைத் தெரிந்துகொள்ள வேளாண் மையம் மூலமாக கோவை  விவசாயக் கல்லூரி மாணவர்கள், சுற்றி உள்ள ஊர்களில் இருந்து சிறு பெரு விவசாயிகள், வெளிநாட்டவர் என அனைவரும் வந்து  ஒருங்கிணைந்த எங்களது பண்ணை விவசாயத்தை பார்வையிட்டு, அதில் பயிற்சியும் பெற்றுச் செல்கின்றனர். பண்ணைக்குள்   நான்கரை அடியில் அகலமான மீன் குட்டை ஒன்றை உருவாக்கி, குட்டைக்குள் கோழிக் கூண்டு ஒன்றை அமைத்திருக்கிறோம்.  கோழிகள் விடும் எச்சம் நேராக குளத்திற்குள் விழும் மாதிரியான அமைப்பு அது. குளத்தின் அடியில் ஒரு ரகம், நடுவில் ஒரு ரகம்,  மேலே வளர்வதற்கென ஒரு ரகம் என மூன்று வித ரகமான மீன்களை குளத்தில் வளர்க்கிறோம். கழிவுகளை உண்ட  மீன்கள் விடும் கழிவும் சேர்ந்து, அதன் அருகே உள்ள சிறிய நீர் தேக்கத்திற்குள் வந்தடையுமாறு அதன் பக்கத்தில்  சிறிய நீர் தேக்கம் செய்து வைத்திருக்கிறோம். அந்த நீர் தேக்கத்திற்குள் முயல், ஆடு, மாடு இவைகளின் கொட்டில் கழிவுகள்  தேக்கத்திற்குள் வந்து சேருமாறு குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் இலை, தழைகள், ஆவாரை, ஊனங்கொடி போன்ற  தலைச் சத்து, மண் சத்துள்ள தேவையற்ற மட்டைகளை கிடப்பில் போட்டு ஊற வைத்து மக்க வைக்கிறோம். இந்த நீர் செடிகளுக்குத்  தேவைப்படும் உர நீராக மாறுகிறது. இந்த நீர் வடிகட்டப்பட்டு அருகே உள்ள தொட்டிக்குள் உர நீராகப் போய்ச் சேருமாறு இணைப்பு  உள்ளது. செடிகளுக்கு சொட்டு நீர் பாசனத்தில் நீர் பாய்ச்சும்போது அத் துடன் இந்த உர நீரும் இணைக்கப்படுகிறது. இதற்கு ஆட்கள்  அதிகம் தேவை இல்லை. ஒவ்வொரு செடிக்கும் உரம் வைக்க வேண்டிய அவசியமும் இதில் ஏற்படாது. அத்தோடு பஞ்சகவ்யம், மண் புழு உரங்கள் எல்லாம்  இணையும்போது விளைச்சலுக்கு பக்க பலமாக உள்ளது.மீன் குட்டையின் மேற்புறத்தில் அசோலா எனப்படும் தாவரம் ஒன்றை  வளர்க்கிறோம். இது ரிச் புரோட்டின் மற்றும் விட்டமின் உள்ள தாவரம் இந்தத் தாவரம் இலை இலையாகப் பிரிந்து தானாக வளரும்  தன்மை கொண்டது. இது ஆடு, மாடு, கோழிகளுக்கு அடர் தீவன உணவாக பயன்படுகிறது. இதனால் கால்நடைகளுக்கான தீவனச்  செலவு கட்டுக்குள் இருக்கும்.சூரிய வெளிச்சம் எங்கெல்லாம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் பயிர்களை நடாமல் விடமாட்டோம்.  தண்ணீரே இல்லை என்றாலும் எங்கள் மரங்கள் 35 ஆண்டுகளைக் கடந்து நிலைத்து நிற்கிறது’’ என்கிறார் நம்பிக்கையோடு இந்த  படித்த விவசாயி.சமீபத்தில் கஜா புயலில் வேரோடு வரிசை வரிசையாக சாய்ந்து கிடந்த தென்னை மரங்கள் நினைவுக்கு வந்தன.-மகேஸ்வரிபடங்கள் : கோவை ரஞ்சித்

You may also like

Leave a Comment

17 + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi