கிருஷ்ணகிரி, ஜூன் 18: கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளி கங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி உஷா தேவி(38). இவர், குருபரப்பள்ளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். கோவிந்தராஜின் தம்பி சரவணன். இவர், அதே பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா என்பவரை காதலித்து கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். அர்ச்சனா சரவணனிடம், உஷாதேவி குறித்து தவறாக பேசியதாக தெரிகிறது. இதனை அறிந்த உஷாதேவி, சரவணனின் வீட்டுக்கு சென்று எதற்காக என்னை பற்றி தவறாக பேசுகிறாய் என அர்ச்சனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர்களுக்குள் வாய்த்தகராறு முற்றிய நிலையில், அர்ச்சனா மற்றும் அவரது உறவினர்களான அஸ்வினி(23), அரவிந்த்(27) ஆகியோர் சேர்ந்து உஷாதேவியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த உஷாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் அர்ச்சனா, அஸ்வினி, அரவிந்த் ஆகியோர் மீது குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் அர்ச்சனா கொடுத்த புகாரின்பேரில் உஷாதேவி மற்றும் அவரது கணவர் கோவிந்தராஜ்(40), உறவினர்களான வெங்கட்ராஜ்(35), அங்கீதா(30) ஆகிய 4பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.