விராலிமலை, ஆக.23: குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் பரம்பூரைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பொன்னையா விளை நிலத்தில் சணப்பு பயிரில் தரமான விதை உற்பத்திக்கான ( ICAR – MSP – RF ) திட்டத்தின் கீழ் சணப்பு விதைகள் வழங்கப்பட்டு, விதை உற்பத்தி திடல் அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விவசாயிகள் பங்களிப்பில் விதை உற்பத்திக்கான பயிற்சி நடத்தப்பட்டது.
இப்பயிற்சியில் வேளாண்மைக் கல்லூரி மரபியல் மற்றும் பயிர் இனப்பெருக்கவியல் துறைத் தலைவர் முனைவர் திருவேங்கடம் தலைமை வகித்து பசுந்தாள் உரப்பயிர்கள் இன்றியமையாமை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இணைப் பேராசிரியர் மற்றும் உழவியல் துறை தலைவர் முனைவர் ஜெய ஸ்ரீனிவாஸ்சணப்பு பயிர் உற்பத்திக்கான உழவியல் மேலாண்மை முறைகள் பற்றியும், விதை அறிவியல் துறை பேராசிரியர் முனைவர் விஜயலட்சுமி உதவி சணப்பில் தரமான விதை உற்பத்தி மற்றும் விதை கொள்முதல் முறைகளை பற்றியும் தங்களது தொழில்நுட்ப உரையில் எடுத்துரைத்தனர்.
விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பசுந்தாள் உரப்பயிர்கள் விதை உற்பத்தி அதிகரிக்கும் நோக்கத்துடன் இப்பயிற்சியானது நடத்தப்பட்டது. இதில் சுமார் 25 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.