பந்தலூர்: பந்தலூர் அருகே எருமாடு வெட்டுவாடி பகுதியில் வசித்து வரும் மக்கள், குடியிருக்கும் நிலத்திற்கு பட்டா கேட்டு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம்,சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட எருமாடு வெட்டுவாடி பகுதியில் சுதந்திரத்திற்கு பின்னர் பிரிட்டிஷார், தங்களிடம் இருந்து வந்த பட்லர்களுக்கு 5 ஏக்கர் வீதம் 150 ஏக்கர் நிலத்தை வழங்கினர். பல குடும்பங்களுக்கு நிலக்காலணி குடியேற்ற சங்கம் அமைத்து குடியமர்த்தினர். அதன்படி அவர்கள் அரசுக்கு குத்தகை செலுத்தி வந்தனர். சங்கம் நலிவடைந்ததால் பட்டா நிலமாக இருந்து வந்த நிலத்தை அதன்பின் அரசு தரிசு தீர்வை நிலமாக மாற்றியது. அதாவது பட்டா வழங்க தகுதியான இடமாக உள்ளது.