குடியாத்தம், ஆக. 29: குடியாத்தம் அருகே ஆடல் பாடல் நிகழ்ச்சியை நிறுத்த கல்லை கட்டி மின்கம்பியில் வீசி மின் தடை ஏற்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த வி.மோட்டூர் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆடல் பாடல் நிகழ்ச்சி தடைபட்டது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு, கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன்படி மின்வாரிய அதிகாரிகள் கிராமத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது மர்ம நபர் மின் தடையை ஏற்படுத்த கல்லை கட்டி மின்கம்பத்தில் செல்லும் மின் ஒயர்கள் மீது எறிந்தது தெரியவந்தது. பின்னர், மாற்று ஏற்பாடு செய்து மின்சாரம் வழங்கினர். சிறிது நேரத்திற்கு பின் ஆடல் பாடல் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.
இதுகுறித்து பரதராமி மின்வாரிய உதவி பொறியாளர் பிரபு பரதராமி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்ததில் அதே கிராமத்தை சேர்ந்த மோகன்(29) மின்தடை ஏற்படுத்த கம்பிகளில் கல்லை கட்டி எறிந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மோகனை நேற்று கைது செய்தனர்.