கோவை, ஜூன் 7: கோவை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் சாலை சீரமைப்பு பணிகளை கலெக்டர் பவன்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கெண்டார். கோவை மாநகராட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மத்திய மண்டலம், திருச்சி பிரதான சாலை (சுங்கம் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை) பகுதி மற்றும் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட காமராஜர் சாலை,
வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் சூயஸ் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் சாலை சீரமைப்புப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் கலெக்டர் பவன்குமார் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது, துணை ஆணையாளா் குமரேசன், தலைமை பொறியாளர் விஜயகுமார், உதவி கோட்டப்பொறியாளர்கள் அறிவழகன், தங்கஅழகர் ராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.