துறையூர், நவ.26: துறையூர் அருகே கீரம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம், கீரம்பூர் ஊராட்சியை சேர்ந்த காந்தி நகரில் சுமார் 200 குடும்பத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வருட காலமாகவே காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்படவில்லை. உப்பு தண்ணீர் மட்டும் வழங்கப்படுவதால் குடிக்க கூட முடியாமல் சிரமப்பட்டு வருவதாக கூறுகின்றனர் .
தங்கள் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்க கோரி ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மனுக்கள் அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் துறையூர் பெரம்பலூர் சாலையில் பெருமாள் மலை அடிவாரம் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட தயாராக இருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் துறையூர் ஒன்றிய செயலாளர் சிவ சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் மற்றும் துறையூர் போலீசார் காந்திநகர் பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் காவிரி கூட்டு குடிநீர் பைப்லைன் அமைத்து தர அதிகாரிகளுக்கு தெரிவித்து ஒரு வாரத்திற்குள் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்ததின் பேரில் அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்வதை கைவிட்டனர்.