மண்டபம்,ஜூன் 5:மண்டபம் பேரூராட்சி பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பில், குடிநீர் குழாய் பைப்புகள் சாலைகளின் அருகே குழிகள் தோண்டப்பட்டு பதிக்கப்பட்டு வருகிறது. இதனால் தெருக்களில் சாலைகள் மிகவும் சேதம் அடைந்து பல மாதங்களாக இருப்பதாகவும், அதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பேரூராட்சி கவுன்சிலர்களும், பொதுமக்களும் பேரூராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து மண்டபத்திற்கு நகர் பகுதிக்கு செல்வதற்காக பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்வதற்காக போடப்பட்டுள்ள சாலை மிகவும் குறுகிய சாலையாகும். இரண்டு பேருந்துகள் இந்த சாலையில் கிராஸ் செய்யும்போது அந்த சாலையில் இடம் பற்றாக்குறையால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. சாலையின் இரண்டு பக்கங்களும் வளர்ந்துள்ள கருவேல மரங்களில் மோதி சேதப்படுத்தி விடும் அளவிற்கு வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து மண்டபம் நகர் பகுதிக்கு நுழையும்போது அந்த குறுகிய சாலையில் பாதி பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு குழிகளும் தோண்டப்பட்டு அதிகமான குழாய்களும் போடப்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இந்த குழாயில் மோதி விபத்துகளை ஏற்படுத்துவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. ஆதலால் குடிநீர் குழாய் பைப்புகள் பதிக்கும் பணிகளை விரைந்து முடித்து, குழிகளை மூடி அந்த பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.