கோத்தகிரி,ஆக.27: கோத்தகிரி அருகே உள்ளது கூக்கல்தொரை கிராமம்.இப்பகுதியில் சுமார் மூன்று கிராமங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு கூக்கல்தொரை மையப்பகுதியான செட் பகுதியில் உள்ள பொதுக்கிணற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வினியோகம் செய்யப்படும் பொது கிணறு கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தூர் வார படாமலும்,கிணற்றில் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் .
இந்நிலையில் கூக்கல்தொரை பகுதியில் உள்ள அரசு பள்ளி,ஆரம்ப சுகாதார நிலையம், மாணவர்களின் விடுதி,வனத்துறை அலுவலகம் மற்றும் கூக்கல்தொரை பகுதியில் உள்ள வியாபாரிகள்,தேநீர் விடுதிகள் இந்த குடிநீரை பயன்படுத்தி வரும் நிலையில் டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை ரீதியான அதிகாரிகள் உடனே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் குடிநீர் விநியோகம் செய்ய வசதி ஏற்படுத்தி தர வேண்டும் அல்லது மாற்றுக் கிணறு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.