மதுரை, ஆக. 23: மதுரை சிந்தாமணி பகுதியில், கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த பொதுமக்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால், சுமார் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுரை சிந்தாமணி 89வது வார்டு பகுதியில் உள்ள போஸ்ட் ஆபீஸ் தெரு, இந்திரா காலனி ஆகிய பகுதிகளில் குடிநீர் இணைப்பு வசதி இல்லாததால், இப்பகுதிகளுக்கு லாரிகள் மூலம் மட்டுமே மாநகராட்சி தரப்பில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியின் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாகவும் இப்பகுதியினர் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இந்நிலையில் தங்கள் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணக்கோரி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிந்தாமணி பஸ் ஸ்டாப் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பேரில், அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றித் தரப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். மேலும் இப்பகுதியில் குடிநீர் விநியோகமும் துவக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.