திருவெண்ணெய்நல்லூர், ஜூன் 23: திருவெண்ணெய்நல்லூர் அருகே தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை குடிக்காதே என்று மனைவி கூறியதால் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு கணவன் தீக்குளித்த தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கோவுலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (64). இவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மது போதையில் வந்த அண்ணாதுரையை ஏன் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்கிறாய் என அவரது மனைவி தட்டிக்கேட்டதற்கு அண்ணாதுரை கோபித்துக்கொண்டு தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டாராம்.
உடனடியாக உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து, அவரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அண்ணாதுரை உயிரிழந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.