வலங்கைமான்: குடவாசல் அருகேயுள்ள பூந்தோட்டத்தில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட 323 ஆய்வு கட்டுரைகளில் 23 ஆய்வுக் கட்டுரைகள் மண்டல மாநாட்டில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்ட அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பில் 31 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நன்னிலம் ஒன்றியம், பூந்தோட்டம் லலிதாம்பிகா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் லலிதா ராமமூர்த்தி மாநாட்டை துவங்கி வைத்தார்,பள்ளி முதல்வர் முத்துராஜ் வரவேற்றார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக். பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் துளிர் இல்லம் சார்ந்த குழந்தை விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இதில் \\”ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்வது \\” என்ற தலைப்பின் கீழ் முதுநிலை, இளநிலை பிரிவுகளில் 323 அறிவியல் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தனர். இவற்றை 30 பேர் கொண்ட கல்லூரி பேராசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் குழுவினர் மதிப்பீடு செய்தனர்.