சாயல்குடி, மே 27: ஏனாதி பூங்குளத்து அய்யனார் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நடந்தது. முதுகுளத்தூர் அருகே ஏனாதி பூங்குளத்தில் பூரண, பொற்கொடியாள் சமே பூங்குளத்து அய்யனார் கோயில் மற்றும் ஏனாதி கிராமத்திலுள்ள முத்துகருப்பணசாமி, அக்னிமாடசாமி கோயிலில் ஜூன் 3ம் தேதி கோ பூஜை, கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கப்பட்டு தொடர்ந்து 3 நாட்கள் 6 கால யாக சாலை, வேள்விகள் நடத்தப்பட்டு 6ம் தேதி கும்பத்தில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடக்க உள்ளது. இதற்காக முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
முன்னதாக கிராம மக்கள் மாரியூர் கடலில் நீராடி வந்தனர். பிறகு கோயிலில் மேளதாளம், குலசையிட்டு முகூர்த்த கால் நடப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். தொடர்ந்து சுடலை மாடசாமி, சேதுமாகாளி, ராக்கச்சி, கருப்பணசாமி உள்ளிட்ட சாமி விக்கிரங்களுக்கு மஞ்சள், பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேப்பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.