கும்பகோணம், ஆக.15: நமது நாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கும்பகோணம் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தேசிய கொடி விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடும் வகையில் (ஹர் கர் திரங்கா-3.0) வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றும் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கைகளில் இந்திய தேசிய கொடி ஏந்தி விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
கும்பகோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணி கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் தொடங்கி மகாமகக்குளத்தின் நான்கு கரைகள் வழியாக சென்று மீண்டும் கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தை வந்தடைந்தது. இந்த பேரணியில் அஞ்சல் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.