குஜிலியம்பாறை, ஜூலை 20: குஜிலியம்பாறை ஒன்றியத்திலுள்ள 17 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை தொட்டி ஆபரேட்டர்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் சங்கம் மாவட்ட குழு உறுப்பினர் பாலசந்திரபோஸ் நேற்று ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) முத்துக்குமாரிடம் மனு அளித்தார்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது: கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு மாதம் ஊதியம் ரூ.12,593ம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு மாதம் ஊதியம் ரூ.14,593ம் வழங்கிட வேண்டும். 7வது ஊதியக்குழு நிர்ணயித்த சம்பளம் நிலுவை தொகையுடன் வழங்கிட வேண்டும். தூய்மை பணியாளர்கள், மேல்நிலை தொட்டி ஆபரேட்டர்களுக்கு காப்பீடு அட்டை வழங்கிட வேண்டும்.
தூய்மை காவலர்களுக்கு நலவாரிய அட்டை தாட்கோ மூலம் விரைந்து பெற்று தர வேண்டும். சீருடை, காலனி, டார்ச் லைட், மழை கோட் வழங்கிட வேண்டும். தூய்மை காவலர்களுக்கு பேட்டரி வாகனம் இல்லாத இடங்களில் வாகனம் ஏற்பாடு செய்து அதனை இயக்கிட பயிற்சி அளித்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.