அகமதாபாத்: காடியாவில் உள்ள தேசாய் நி போல் அருகே ரத யாத்திரை கொண்டாட்டத்தில் 18 யானைகள் கொண்ட ஊர்வலத்தில் இருந்த ஒரு ஆண் யானை கட்டுப்பாட்டை இழந்து பார்வையாளர்களிடையே ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அகமதாபாத்தில் நடைபெறும் மிக முக்கியமான மத நிகழ்வுகளில் ஒன்றாக ரத யாத்திரை நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில், யானைகள் மற்றும் ரதங்கள் உட்பட பொதுமக்கள் கூட்டத்தையும், ஊர்வல பங்கேற்பாளர்களையும், நிர்வகிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், 18 யானைகள் ஊர்வலத்தில் பங்கேற்ற நிலையில் ஒரு ஆண் யானை திடீரென பதற்றமடைந்து ஓடத் தொடங்கி நியமிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றது.
இதனை கண்ட பொதுமக்கள் அப்பகுதியிலிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடத்தொடங்கினர். பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விலங்கியல் பூங்கா கண்காணிப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து யானைக்கு உடனடியாக மயக்க மருந்து செலுத்தினர். பின்னர் அவர் கூறியதாவது, இரண்டு பெண் யானைகள் கூட்டத்திலிருந்து மெதுவாக விரட்டப் பட்டன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை, அப்பகுதியில் கூட்டம், சிறிது நேரத்தில் பதற்றமடைந்தாலும், விரைவாகக் கட்டுப்படுத்தப்பட்டது. ஆண் யானை இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நடந்து வரும் ரத யாத்திரை ஊர்வலத்தில் மீண்டும் சேராது என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.