சேலம், ஆக.10: சேலம் குகை மாரியம்மன் கோயில் தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர். சேலம் குகை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற குகை மாரியம்மன், காளியம்மன் கோயிலில் ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி விழா நேற்று நடந்தது. இதனையொட்டி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
அதனை தொடர்ந்து, கோயில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கைக்குழந்தைகளுடன் குண்டம் இறங்கியது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. பின்னர், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் கூட்டம் திரண்டதையொட்டி, உதவி கமிஷனர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சந்திரகலா ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.