நாகப்பட்டினம், ஜூன் 18: நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: முதலமைச்சர் ஆணையின்படி மக்களுடன் முதல்வர் திட்டம் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பாப்பாக்கோவில், குறிச்சி, சின்னதும்பூர், பிரதாபராமபுரம், திருக்குவளை, ஆதமங்கலம் மற்றும் ராதாமங்கலம் ஆகிய 7 ஊராட்சிகளில் இன்று (18ம் தேதி) நடைபெற உள்ளது. இம்முகாம்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்-மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேமலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, சமூக சீர்த்திருத்தத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மை- உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய 15 துறைகள் சார்ந்த 44 சேவைகள் தொடர்பான கோரிக்கைகள் குறித்த மனுக்கள் இம்முகாம்களில் பெறப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். முகாமிற்கு கோரிக்கை மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கையினை கணினியில் பதிவு செய்ய ஆதார் அட்டை, குடும்ப அட்டை, கைபேசி எண் மற்றும் கோரிக்கை தொடர்பான உரிய ஆவணங்கள் எடுத்து வரவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.