கீழ்வேளூர், மே 15: மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டார அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி நேற்று, கீழ்வேளுர் வட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேரூராட்சிகுட்பட்ட மார்க்கெட் பகுதிகள், பேருந்து நிலையம், வேளாங்கண்ணி கடற்கரை, வேளாங்கண்ணியில் நவீன உணவு கடைகள் அமைக்கும் பணிகள் மற்றும் ஆரியநாட்டு தெற்கு தெருவில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலையின் நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கள ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் கீழ்வேளூர் தாசில்தார் கவிதா, வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர்கள் பொன்னுசாமி, குகன் மற்றும் கீழையூர், கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.