பெரம்பலூர், ஜூன் 23: கீழடி அகழாய்வு முடிவை வெளியிடாத ஒன்றிய அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பெரம்பலூரில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் தனியார் கூட்ட அரங்கில், மாவட்டத் தலைவர் குதரத்துல்லா தலைமையில் நடைபெற்றது. தலைமை பிரதிநிதி சுல்தான் மொய்தீன், தலைமை செயற்குழு உறுப்பினர் மீரா மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் முஹம்மது இலியாஸ் அலி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் முஹம்மது இலியாஸ், மாவட்டப் பொருளாளர் சையது உசேன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சாதிக் பாஷா, சபியுல்லா, சையது பாதுஷா, அப்துல் கஃபார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை நிலைய பேச்சாளர் திருச்சி ரபீக் சிறப்புரையாற்றினார்.
அப்போது, மதுரையில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இரட்டைக் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற உள்ள பேரணி மற்றும் மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று பங்கேற்பது, மாநாட்டிற்கு செல்வதற்கான களப்பணிகளை மிகத் தீவிரமாக செயல்படுத்துவது, தமிழர்களின் வரலாற்றை மெய்ப்பிக்கும் கீழடி அகழாய்வு முடிவை வெளியிடாத ஒன்றிய அரசுக்கு கண்டனத்தை தெரிவிப்பது என்பன உள்ளிட்டப் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட தொண்டர் அணிச் செயலாளர் பீர் முஹம்மது, பெரம்பலூர் நகரச் செயலாளர் அப்துல் அஜீஸ், அரும்பாவூர் நகரத் தலைவர் நிஜாமுதீன் ஒன்றிய செயலாளர் முஹம்மது உஸ்மான் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக மாவட்டத் துணைச் செயலாளர் முஹம்மது ஹனிபா வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மது இஸ்மாயில் நன்றி கூறினார்.