கீழக்கரை, மார்ச் 6: கீழக்கரை பகுதியில் கடற்கரையோரம் ஆமைகள் தற்போது முட்டையிட்டு செல்கின்றன. இவற்றை ஆமை முட்டை பொரிப்பக பணியாளர்கள் சேகரித்து பாதுகாத்து வருகின்றனர்.கீழக்கரை வனஉயிரின சரகத்திற்கு உட்பட்ட வாலிநோக்கம், புதிய பம்ப் ஹவுஸ், ஆதம்சேரி கடற்கரைப் பகுதிகளில் வனத்துறை சார்பில் கடல் ஆமை முட்டை பொரிப்பகங்கள் உள்ளன. ஆதம்சேரி பொரிப்பகம் அருகே, தற்காலிக பணியாளர்கள் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அரிய வகையை சேர்ந்த ஆலிவ் ரெட்லி வகை கடல் ஆமை முட்டையிட்டு சென்றதை பார்த்தனர். இதையடுத்து அங்கிருந்து 98 முட்டைகளை சேகரித்து கொண்டு வந்து பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்தனர்.
தகவலறிந்த மாவட்ட வன உயிரின காப்பாளர் முருகன், உதவி வனப்பாதுகாவலர் கோபிநாத், கீழக்கரை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் கடல் ஆமை முட்டை கண்காணிப்பு குழுவினரின் பணியை பாராட்டினர். வனச்சரக அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது: கீழக்கரை வனச்சரக கடற்கரை பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 3 கடல் ஆமை பொரிப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு இதுவரை 200 ஆமை குஞ்சுகள் பொரிக்கப்பட்டு பாதுகாப்பாக கடலுக்குள் விடப்பட்டுள்ளன’ என்றார்.