கீழக்கரை, நவ. 1: ராமநாதபுரம் மாவட்டம் , கீழக்கரையில் மின்சாரம் தாக்கி வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி ஊராட்சிக்குட்பட்ட செங்கல் நீரோடை பகுதியில் உள்ள தோப்பில் கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கொல்கத்தா கன்குறியா ஊரைச் சேர்ந்த இஜாபுல் மகன் ரூபல் (22) என்பவர் கண்ணன் (எ) முத்துகிருஷ்ணன் ஒப்பந்தக்காரரிடம் பணிபுரிந்து வந்துள்ளார்.
அப்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் போது கட்டிடத்திலிருந்து கம்பி மூலம் மின்சாரம் பாய்ந்ததில் வட மாநில கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கீழக்கரை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து ஏற்கனவே கட்டிட ஒப்பந்ததாரிடம் கட்டிட ஊழியர்கள் புகார் அளித்திருந்தும் அலட்சியம் காட்டியதால் உயிர் பலி ஏற்பட்டுள்ளது என்று வெளி மாநில தொழிலாளர்கள் கூறினர்.
மேலும் இது போல் சென்ற வாரம் வட மாநில தொழிலாளர் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து பலியானது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.