பூதப்பாண்டி, ஜூன் 27: கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் சுற்றிவரும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் யானை, மிளா, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகின்றன. இதில் யானைகள் அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி மலையில் இருந்து இறங்கி அடிவாரத்தில் உள்ள மலைகிராம பகுதிக்கு வருகின்றன. இவ்வாறு வரும் யானைகள் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்துகின்றன. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை மேற்கு மலை தொடர்ச்சியையொட்டி உள்ள கீரிப்பாறை பகுதியில் சுற்றிதிரிந்து வருகிறது. இந்த யானை குடியிருப்புகளில் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி வருவதோடு, ரப்பர் பால் வெட்ட செல்லும் தொழிலாளர்களையும் அச்சுறுத்தி வருகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு ஒற்றை யானை கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்தது. இதனை கண்ட ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை யானையை தொழிலாளர்கள் விரட்ட முயற்சித்தும், யானை அங்கிருந்து செல்லாமல் நீண்ட நேரம் நின்று கொண்டு போக்கு காட்டியது.
நீண்ட நேரத்துக்கு பிறகு காட்டு யானை குடியிருப்பில் இருந்து வெளியேறி அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் தோட்ட தொழிலாளர்கள், குடியிருப்புவாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.