புதுக்கோட்டை, ஜூன் 23: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து தாயினிப்படி, கருப்பாடி பட்டி வழியாக இலுப்பூர், அன்னவாசல் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேருந்து நிலையத்தில் இருந்து குளத்தூர், அத்திரிவயல், தாயினிப்படி, பெருங்குடிப்படி, கருப்பாடி பட்டி ,சித்துப்பட்டி ஆகிய ஊர்கள் வழியாக அன்னவாசல், இலுப்பூர் பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளது. அனைத்து கிராம மக்களும் இந்த வழித்தடத்தில் வரும் பேருந்துகளை பயனித்துதான் கீரனூர் நகர் பகுதிக்கு வர வேண்டும்.
அனைத்து கிராமமும் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். கீரனூர் நகர் பகுதியில் தான் விவசாயத்திற்கு தேவையான உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள், விதைபொருட்களை வந்து வாங்கி செல்கின்றனர். இதேபோல் இந்த கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் கீரனூர் நகர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் திருச்சி, புதுக்கோட்டை ஆகிய நகரங்களுக்கு கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கீரனூர் வந்துதான் இந்த நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் இந்த வழித்தடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எந்த பேருந்து வந்ததோ அதே பேருந்துகள் தற்போதும் இயக்கப்படுகிறது. இதனால் தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதனால் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்.
மேலும் தற்போது இயக்கப்படும் பேருந்துகள் ஓட்டை உடசுலுடன் இயக்கப்படுவதால் பயணிகள் பேருந்தில் பயணிக்க அச்சப்படுகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:கீரனூரில் இருந்து குளத்தூர், அத்திரியவல், தாயினிப்படி, பெருங்குடிப்படி, கருப்பாடி பட்டி சித்துப்பட்டி வழியாக அதிக பேருந்துகள் இயக்க வேண்டும் என்று நாங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் இருக்கிறோம். குறிப்பாக காலை, மாலை வேலைகளில் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வருவதற்கு கூட்ட நெரிசலில் சிக்கி மிகுந்த சிறமங்களை அனுபவிக்கின்றனர். பேருந்துகளும் ஓட்டை உடசலுடன் இருப்பதால் சில நேரங்களில் குழந்தைகள் லேசான காயமடைகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்னறர்.
இனியாவது தகுந்த நடவடிக்கை எடுத்து கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள் உரங்கள், மருந்துகளை வாங்கி குறித்த நேரத்தில் கிராமங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் தினறி வருகின்றனர். சில நேரங்களில் விவசாயிகள் தங்கள் தனியார் வாடகை வேன் எடுத்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கும், போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.