புதுச்சேரி, மே 25: புதுச்சேரி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, புதுச்சேரி முழுவதும் எந்தந்த சாலைகளில் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் வாகனங்கள் அதிக வேகமாக செல்வதாக தொடர்ச்சியாக புகார்கள் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு வந்தது. இதையடுத்து போக்குவரத்து சீனியர் எஸ்.பி. பிரவீன்குமார் திரிபாதி உத்தரவின்பேரில், வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் ஸ்பீடு கன் மூலம் விதிகளை மீறி வேகமாக செல்லும் வாகனங்களை கண்டுபிடித்து அபராதம் விதித்தனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு கூறுகையில், சமீப காலமாக புதுச்சேரியில் வாகனங்கள் அதிக வேகமாக சென்று விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அதன்படி, கிழக்கு கடற்கரை சாலையில் ஸ்பீடு கன் மூலம் ஆய்வு பணி நடந்தது. இதில் கிழக்கு கடற்கரை சாலையில் அதிகபட்சமாக 40 கி.மீ வேகத்தில் வாகனம் செல்ல வேண்டும். ஆனால், விதிகளை மீறி சென்ற சுமார் 100க்கு மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஸ்பீடு கன் சுமார் 100 மீட்டர் தூரத்தில் வரும் வாகனங்களை, எவ்வளவு வேகத்தில் செல்கிறது என கண்டறிந்து, அதனை புகைப்படம் எடுக்கிறது. அந்த புகைப்படத்தில் வாகன எண், நேரம், எவ்வளவு வேகத்தில் வாகனம் வந்தது உள்ளிட்ட விவரங்களுடன் அபராதம் விதிக்கப்பட்ட உரிமையாளருக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. இதேபோல், இன்னும் சில நாட்களில் இன்டர்செப்டர் வாகனம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த வாகனத்தில் 360 டிகிரி கோணத்தில் சூழலும் கண்காணிப்பு கேமரா, வாகனங்களின் வேகத்தை கணக்கிடும் கருவி, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் கண்டுபிடிக்கும் மூச்சு பகுப்பாய்வு கருவி உள்ளிட்ட நவீன கருவிகள் இடம்பெற்றுள்ளன, என்றார்.