கீழக்கரை, ஆக.20: ராமநாதபுரத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றால் 17 கி.மீ. தொலைவில் கீழக்கரை உள்ளது. இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஏராளமான மரக்கன்றுகள் வெட்டி அழிக்கப்பட்டது. இதன் பிறகு கிழக்கு கடற்கரை சாலை இருபுறமும் பசுமை திட்டம் சார்பில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டன.
மரக்கன்றுகள் வளர்ந்த போது சமூக விரோதிகள் சேதப்படுத்தியால், பெரும்பாலான மரங்கள் வளராமல் போயின. இந்நிலையில் கீழக்கரை-திருப்புல்லாணி-ராமநாதபுரம் செல்லும் கடற்கரை சாலையில் குறைந்த எண்ணிக்கையிலான மரங்கள் பெயரளவில் வளர்ந்துள்ளன. கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலை இருபுறமும் நிரந்தரமாக மரகன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்.
தற்போது மரங்கள் இருந்த இடங்களில் சீமை கருவேல மரங்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன. இதனால் பகல், இரவு வேளையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கருவேல மரங்கள் மண்டி படர்ந்துள்ளன. எனவே கிழக்கு கடற்கரை சாலை இருபுறமும் நிழல் தரும் மரங்களை நட்டு முறையாக பராமரித்து பசுமை சாலையாக மாற்ற வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.