குடியாத்தம், ஆக.23: குடியாத்தத்தில் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற பெண் இறந்தது தொடர்பாக, போலி பெண் டாக்டரை போலீசார் நேற்று கைது செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் சுதந்திர வீதியை சேர்ந்தவர் சேதுபதி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியங்கா(36). இவருக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதற்காக, குடியாத்தம் வாரியார் நகரில் கிளினிக் நடத்தி வரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மனைவி பிரியா(40) என்பவரிடம் கடந்த 20ம் தேதி இரவு அழைத்து சென்றனர். அங்கு பிரியங்காவுக்கு, பிரியா ஊசி போட்டு, மருந்து மாத்திரைகள் கொடுத்தாராம். பின்னர், வீட்டிற்கு வந்த பிரியங்கா நேற்று முன்தினம் அதிகாலை திடீரென இறந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதையறிந்த கிளினிக் நடத்தி வரும் பிரியா, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ₹5 லட்சம் கொடுத்து சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் வாட்ஸ்அப் உட்பட சமூக வலைதளங்களில் பரவியது.
இதையறிந்த குடியாத்தம் தலைமை அரசு மருத்துவமனை டாக்டர் பாபு, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட கிளினிக்கில் சோதனை நடத்தினர். அதிகாரிகள் வருவதை அறிந்த பிரியா தலைமறைவானார். இதையடுத்து, அந்த கிளினிக்கில் இருந்த மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அரசு மருத்துவமனை டாக்டர் பாபு அளித்த புகாரின்பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து பிரியாவை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது ெசய்து விசாரித்தனர். அதில், டிப்ளமோ நர்சிங் படித்து வந்த பிரியா, படிப்பை முழுமையாக முடிக்காமல் இடையில் நிறுத்தியதும், கிளினிக் அமைத்து கடந்த 3 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.