தஞ்சாவூர்: நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் ‘வி.வி.பேட்’ இயந்திரத்துக்கான 4,330 பேட்டரிகள் மகாராஷ்டிர மாநிலம் புனேவிலிருந்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தடைந்தது. நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சாவூர், மயிலாடுதுறை தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள ‘வி.வி.பேட்’ எனப்படும் வாக்காளர் செலுத்திய வாக்கை சரிபார்க்கும் இயந்திரத்துக்கான 4,330 பேட்டரிகள், மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இருந்து லாரி மூலம் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தது. ‘சீல்’ வைக்கப்பட்ட 87 மரப்பெட்டிகளில் அவை எடுத்து வரப்பட்டன. இந்த பேட்டரிகளை வருவாய்த்துறையினர் கணக்கிட்டு தனி அறையில் பாதுகாப்பாக வைத்தனர்.