ஆனைமலை: கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஆழியார் வால்பாறை ரோட்டில் உள்ள கவியருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியாறு அணை, கவியருவி, ஆழியாறு பூங்கா, வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலா தலங்களாக உள்ளன. இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருக்கும். குறிப்பாக, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவி மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பகுதிகளாக உள்ளன.இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டும், தொடர் விடுமுறை காரணமாகவும் ஆழியார் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்திருந்தனர். ஆழியார் வந்த சுற்றுலா பயணிகள் பலரும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவிக்கு சென்று ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருந்ததால் கவியருவியில் ஏராளமான வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல், ஆழியார் பூங்கா, ஆழியாறு காற்றின் தடுப்பணை உள்ளிட்ட பகுதிகளில் ஆழியாறு காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று ஒரே நாளில் 1589 பேர் கவியருவிக்கு வந்தனர். நுழைவுக்கட்டணம் மூலம் ரூ.79,450 வருவாய் கிடைத்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….