சிவகங்கை, ஆக.26: சிவகங்கையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை அருகே அழகு மெய்ஞானபுரத்தில் மூன்றாம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் சிவகங்கை-தொண்டி சாலையில் நடத்தப்பட்டது. இந்த பந்தயத்தில் பெரியமாடு, சிறியமாடு, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக மாட்டு வண்டியும் குதிரை வண்டி பந்தையமும் நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் 10 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 16 ஜோடிகளும், பூஞ்சிட்டுப் பதிவில் 16 ஜோடிகள் என மொத்தம் 42 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. முதலாவதாக நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் பெரியமாடுகளுக்கான எல்கையாக 8 மைல் தூரமும், சிறிய மாடுகளுக்கு 6 மைல் தூரமும், பூஞ்சிட்டு பிரிவிற்கு 5 மைல் தூரமும் பந்தய எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டது.
இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகளுடன் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மாடுகள் சீறிப்பாய்ந்து சென்று ஒன்றை ஒன்று முந்தி சென்றன. முதல் 5 இடங்களை பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் வெற்றிக் கோப்பையும் ரொக்க பரிசம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் சிவகங்கை, வாணியங்குடி, அழகுமெய்ஞ்ஞானபுரம், ரோஸ் நகர், பையூர், நாட்டரசன்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த ரசிகர்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று உற்சாகமாக கண்டுகளித்தனர்.