திருச்சி, ஆக.27: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வேணுகோபால கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ணபகவானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நேற்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பகவான் விஷ்ணுவின் 8வது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தை கொண்டாடும் வகையில் கிருஷ்ண ஜெயந்தி அமைந்துள்ளது. கிருஷ்ணர் அவதரித்த நாளான ஆவணி மாத அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திர நாளைதான் நாடுமுழுவதும் கிருஷ்ண ஜெயந்தி – கோகுலாஷ்டமி – கிருஷ்ண ஜென்மாஷ்டமி என பல்வேறு பெயர்களில் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். இந்நாளில் விரதமிருந்து கிருஷ்ணரின் துதிப் பாடல்களைப் பாடி, அவருக்கு பிடித்தவற்றை படையலிட்டு வழிபாட்டால், வாழ்வில் நலமும், வளமும் செழிக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்தி தினமான நேற்று திருச்சி பீமநகரில் உள்ள பிரசித்திபெற்ற 200ஆண்டுகள் பழமைவாய்ந்த வேணுகோபால கிருஷ்ணன் ஆலயத்தில் காலை மூலவருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர், நெய், திரவியம், இளநீர், சாத்துக்குடி, ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று, பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பான அலங்காரத்தில் கிருஷ்ணர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் கிருஷ்ணரை மனமுருக வழிபாடு செய்தனர்.