திருப்பூர், ஆக.22: கிருஷ்ணர் ஜெயந்தி விழா வருகின்ற 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் பெரும்பாலும் தங்கள் இல்லங்களில் கிருஷ்ணர் சிலைகளை வாங்கி வைத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்திக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கிருஷ்ணர் சிலை மற்றும் குழந்தைகளுக்கு கிருஷ்ணன் வேடமிடக்கூடிய பொருட்களை வாங்குவதில் பெருமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கான பொருட்கள் திருப்பூர் கடைவீதிகளை ஆக்கிரமித்துள்ளது. ஏராளமான கடைகளில் கிருஷ்ணர் சிலைகள் அரை அடி முதல் 3 அடிவரை வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் முதல் இயற்கைக்கு மாசு ஏற்படாத வகையில் காகிதங்களால் செய்யப்பட்ட கிருஷ்ணர், ராதா, கோமாதா சிலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சிலைகள் 90 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிடக் கூடிய வகையில் கிருஷ்ணரின் உடைகள், துண்டு, நகைகள், புல்லாங்குழல் உள்ளிட்டவை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது இவை ரூ.50 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.