கிருஷ்ணராயபுரம், ஜூன் 27: கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளி சார்பில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு மன்றம் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் மாணவர்களின் பேரணி பள்ளி தலைமையாசிரியர் பெரியசாமி (பொ) தலைமையில் நடைபெற்றது. மாயனூர் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர். சசிகலா, பேரணியை தொடங்கி வைத்தார்.
மாணவ, மாணவிகளின் பங்கேற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி பள்ளியில் தொடங்கி, நடு அக்ரஹாரம், கீழ அக்ரஹாரம், மஞ்சமேடு, பேரூராட்சி அலுவலகம், கடைவீதி வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. மாணவர்களும் ஆசிரியர்களும் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த வாசகங்களை கூறியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக அனைவராலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், தலைமைக் காவலர்கள் அருண் மற்றும் ஆனந்தன், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு உதவியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.